“எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்கலாம்; ஆனால் தாய் மொழியை கட்டாயம் கற்க வேண்டும்” என பேசியுள்ளார் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி.
சென்னை ராமகிருஷ்ணா மடம் சார்பில் விவேகானந்தர் நவராத்திரி நிறைவுவிழா மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ராமகிருஷ்ண மடத்தின் வளர்ச்சிக்கும், விவேகானந்தரின் கருத்துகளை மக்களிடம் சேர்க்கவும் சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் இயக்குனர் கிருஷ்ணசாமி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வரதராஜன், இன்டக்ரா சாஃப்ட்வேர் கம்பெனியின் நிறுவனர்கள் ஸ்ரீராம், அனுராதா ஸ்ரீராம் ஆகியோருக்கு ராமகிருஷ்ண மிஷன் துணை தலைவர் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் விருதுகளை வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
துணைவேந்தர் கௌரி பேசுகையில், “தற்போதைய இளம் சமுதாயம் சீர்கெட்டு கிடக்கிறது. சீர்கெட்டு கிடக்கும் இளம் சமூகத்தினரை நல்வழிப்படுத்துவதற்கு விவேகானந்தரின் கருத்துக்களும், ராமகிருஷ்ண மடம் போன்றவைகளில் சேவை உதவியாக இருக்கும். யார் எந்த மொழியை வேண்டுமென்றாலும் கற்கலாம். பல மொழிகளையும் பேசலாம். ஆனால் தாய் மொழியை கட்டாயம் கற்க வேண்டும். தாய் மொழியை பேச வேண்டும். எனக்கு ஐந்து மொழிகள் தெரியும். தாய்மொழியாம் தமிழ் மொழியில் பேசுவது தான் சிறப்பானது. எப்போதும் தாய் மொழிக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும்'' என்று கௌரி பேசினார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News