“ஆளுநரின் செயல்பாடுகளை புரிதல் இல்லாமல் அரசியலாக்க வேண்டாம்” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் தெரிவித்தார்.
கோவை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள ஜக்கார்பாளையம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் குணசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் கலந்து கொண்டார். ஜக்கரபாளையம் பிரிவிலிருந்து மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்ட ஜிகே.வாசனுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டதை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநரை பொறுத்தவரையில் அவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. அதை வெளிப்படுத்துகிறாரே தவிர யாருக்கும் எதற்கும் அவர் அழுத்தம் தரவில்லை. கோரிக்கையும் வைக்கவில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தவில்லை.
அப்படி யாராவது ஒரு கருத்தை வலியுறுத்தினால் வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் அரசிடம் தான் உள்ளது. இது போன்ற சாதாரண விஷயங்களை புரிதல் இல்லாமல், இதை அரசியலாக்க வேண்டாம். தனிமனித காழ்ப்புணர்ச்சியும் தேவையில்லை. ஆளுநர் அரசின் நிலைப்பாட்டை படித்தார். ஆளுங்கட்சி எதிர்பார்ப்பை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் இல்லை என்பது ஏமாற்றம் தான். அண்ணாமலை தமிழக மக்களின் எண்ணங்களை, பிரதிபலிப்புகளை அரசின் தவறுகளை சுட்டிக்காட்டக் கூடிய நிலையில், உள்ளூர் கூட்டணி வலுவாக உள்ளது.
தமிழகத்தில் திமுகவுக்கு எதிர்மறை ஓட்டுகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. எங்கள் கட்சியை பொறுத்தவரை, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தற்போதுள்ள கூட்டணியே தொடரும். இதுவே மிகப்பெரிய வெற்றியை பெரும்” என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News