``மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான், மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்”- வி.கே.சசிகலா

“தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற்றுள்ளது திமுக அரசு. அதன் 20 மாத கால ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசி உயர்வால், மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என வி.கே.சசிகலா பேசியுள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி வெற்றிபெற வேண்டுமென வி.கே.சசிகலா வேன் மூலம் தொண்டர்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் வேனில் இருந்தபடியே நேற்று அவர் பிரச்சாரம் செய்தார்.

image

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே வி.கே.சசிகலா வருகைதந்த போது கிரேன் மூலம் 100 அடி உயரத்தில் இருந்து மலர் தூவி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொண்டர்களை சந்தித்து பேசிய வி.கே.சசிகலா “அதிமுக ஆட்சியில் அம்மா இருந்த போது மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். பெண்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.

ஆனால் தற்போது திமுக-வின் 20 மாத கால ஆட்சியில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வும் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. போதை பொருட்களின் புழக்கமும் அதிகமாகவே உள்ளது. திமுக அரசு 20 மாத காலத்தில் வரி என்ற பெயரில் மக்களிடம் இருந்து அதிகமாக வாங்கினார்களே தவிர, மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.

image

அதிமுக ஆட்சியில் தான் தமிழக மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். இனியும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். ஏழை மக்களும் வாழ முடியும். எனவே கழகத்தினர் அனைவரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக உழைக்க வேண்டும். இன்னும் 100 ஆண்டுகளை கடந்து மக்களுக்காகவே நாம் தொண்டாற்ற வேண்டும். புரட்சி தலைவி அம்மா ஆட்சி அமைந்த உடன் இப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும்” என பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post