பெங்களூரு விமான நிலைய தாக்குதல் சம்பவத்தில், நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த நடிகர் மகா காந்தி, கடந்த நவம்பர் 2-ம் தேதி இரவு, பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி, பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
மேலும், அந்த மனுவில் உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில், அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9-வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், ஜனவரி 4-ம் தேதி விஜய சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து நடிகர் விஜய் சேதுபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் சேதுபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தை, கீழமை நீதிமன்றம் விசாரிக்க முடியாது என வாதிட்டார்.
மகா காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மகா காந்தி கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர் இன்னும் சிகிச்சையில் இருப்பதாகவும், சம்பவம் பெங்களூருவில் நடந்தாலும், புகார்தாரர் சென்னையை சேர்ந்தவர் என்பதால், சைதை நீதிமன்றம் விசாரிக்கலாம் என விளக்கம் அளித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தீர்களா? என கேள்வி எழுப்பியபோது, புகார் அளிக்கப்பட்டது எனவும், ஆனால் கட்டபஞ்சாயத்து நடத்தப்பட்டதாகவும் மகா காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, கட்டப்பஞ்சாயத்து பேசப்பட்டது என்றால், அதுதொடர்பாக பெங்களூரு காவல் ஆணையரிடமோ அல்லது உயர் அதிகாரிகளிடமோ புகார் அளித்தீர்களா என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஜான்சனுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு, இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கின் விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News