தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் நடைபெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான ரேக்ளா பந்தயம் பந்தய தூரத்தை அடைந்து திரும்பி வரும் வழியில் விபத்தில் சிக்கிய குதிரையும், ஜாக்கியும் மீண்டெழுது முதல் பரிசு வென்ற அதிசயம் அரங்கேறியது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலை முன்னிட்டு புகழ்பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா) நடைபெறுவது வழக்கம். மூன்று ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கம் போல் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றது.
மாட்டு வண்டிகளுக்கான பந்தயம் முடிவுற்ற நிலையில் குதிரை வண்டிகளுக்கான பந்தயங்கள் பிற்பகல் துவங்கியது. மாலை வரை நான்கு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஐந்து மாடுkaL மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்கள் மற்றும் ஜாக்கிகளுக்கு வெற்றிக் கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் இரண்டாவது பந்தயமாக நடைபெற்ற நடு குதிரைக்கான பந்தயத்தில் பத்துக்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் புறப்பட்டு தரங்கம்பாடி வரையிலான எல்லையை அடைந்து மீண்டும் புறப்பட்ட எல்லையை நெருங்கி வந்த நிலையில், அனந்தமங்கலம் அருகே வளைவில் திரும்பிய போது பழுதடைந்த சாலையில் கவிழ்ந்து 3ஆம் எண் குதிரை வண்டி விபத்துக்குள்ளானது. கவிழ்ந்து காயமடைந்த நிலையிலும் குதிரையும் அதன் ஜாக்கி பிரகதீஸ்வரனும் உடனே எழுந்து எல்லையை நோக்கி சீறிபாய்ந்தனர்.
இதில் முன்னால் சென்ற குதிரைகளை முந்தி சென்று, 3ஆம் எண் வண்டி பந்தயத்தில் முதலிடம் பெற்று அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எது நடந்தாலும் நம் மீது கொண்ட நம்பிக்கை விடாமல் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக பார்வையார்கள் குதிரையையும் ஜாக்கி பிரகதீஸ்வரனையும் பாராட்டி வாழ்த்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News