நமது உடலில் ஏற்படும் சில குறைபாடுகள் மற்றும் பிரச்னைகளுக்கு வெளிப்புற அறிகுறிகள் தென்படும். சில பிரச்னைகள் அறிகுறிகள் காட்டாமலேயே திடீரென பெரிதாக உருவெடுக்கும். பெரும்பாலான பிரச்னைகளின் அறிகுறிகள் நாக்கு, நகம், தோல், எச்சில் மற்றும் சிறுநீர் போன்றவற்றில் தெரியும். அப்படி சிறுநீரின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் உடலில் என்னென்ன மாதிரியான பிரச்னைகளை குறிக்கின்றன என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
தெளிந்த நீர்
சிறுநீரானது தண்ணீர் போல் தெளிவான நீர் போன்று வெளியேறினால் உடல் நலமுடன் உள்ளது என்று அர்த்தம். சிலர் அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் தெளிவான சிறுநீர் வெளியேறும். ஆனால், அது உடலிலுள்ள மினரல்கள், உப்பு மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை அதிகப்படியாக வெளியேற்றிவிடும். இதனால் ரத்தத்தில் ரசாயன சமநிலையின்மையை ஏற்படலாம்.
வெளிறிய மஞ்சள்
போதுமான நீர் அருந்துவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். சிறுநீர் இதுபோன்று வெளியேறினாலும் உடல்நல குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. வலி, காய்ச்சல் அல்லது அசாதாரணமாக அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. குறிப்பாக தொடர்ச்சியாக சில நாட்கள் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
அடர் மஞ்சள்
இதுவும் சாதாரணமானதுதான். ஆனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அதிக தண்ணீர் குடிக்கவேண்டும். ஏனெனில் உடல் வறட்சியை இது காட்டுகிறது. உடல் அதீத வறட்சியடையும்போது சில நேரங்களில் அடர் மஞ்சளிலிருந்து ப்ரவுன் நிறத்தில்கூட சிறுநீர் வெளியேறலாம்.
ப்ரைட் மஞ்சள்
நியான் லைட் போன்று பிரகாசமான மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறதா? பெரும்பாலும் மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்வதன் விளைவாக இருக்கலாம். குறிப்பாக ரிபோஃப்ளாவின் என்று சொல்லக்கூடிய வைட்டமின் பி2 மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் சிறுநீரின் நிறம் மாறும். சில மாத்திரைகளை அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே எந்தவொரு மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன்பும் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. நமது உடலின் தன்மை மற்றும் நோயின் வீரியத்துக்கு ஏற்ப மாத்திரைகளை பரிந்துரைப்பர்.
ஆரஞ்சு
வைட்டமின் சி மற்றும் கரோடீன் போன்ற குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களை அதிகளவு எடுத்துக்கொண்டால் சிறுநீரின் நிறம் ஆரஞ்சாக மாறும். குறிப்பாக ஃபெனாசோபிரிடின் அல்லது ரிஃபாம்பிசின் போன்ற மாத்திரைகள் சிறுநீர்ப்பையை மரத்துப்போக செய்யும் வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு அதிலிருந்து சுரக்கும் பிலிருபினானது சிறுநீருடன் கோர்ப்பதால் அவர்களுக்கு சிறுநீர் ஆரஞ்சு நிறத்தில் வெளியேறும்.
வெளிர் ப்ரவுன்
அதிகப்படியான உடற்பயிற்சி அல்லது அதிக சூடான அல்லது அதிக குளிரான சீதோஷண நிலையில் வேலை செய்வதால் தசை நார்ச்சத்தானது உடையும். இதனை ராப்டோமயோலிசிஸ் என்பர். இந்த கழிவானது சிறுநீர் வழியாக வெளியேறும்போது வெளிர் ப்ரவுன் நிறத்தில் வெளியேறும். சில நேரங்களில் வெளிறிய ப்ரவுன் நிற சிறுநீரானது உடல் வறட்சியையும் குறிக்கலாம். மேலும் மஞ்சள் காமாலை, கில்பர்ட் சிண்ட்ரோம்(கல்லீரல் நோய்), சிறுநீரக பிரச்னை அல்லது செயலிழப்பு போன்றவற்றாலும் சிறுநீர் வெளிர் ப்ரவுன் நிறத்தில் வெளியேறலாம்.
அடர் ப்ரவுன்
சிவப்பு பீன்ஸ் மற்றும் rhubarb (கீரை வகை) போன்றவற்றை அதிகளவில் உண்ணுவது அடர் ப்ரவுன் நிறத்தில் சிறுநீர் வெளியேற காரணமாகலாம். குளோரோகுயின் மற்றும் ப்ரைமாகுயின் போன்ற குறிப்பிட்ட சில மலேரியா எதிர்ப்பு மருந்துகள், மெட்ரோனிடசோல் மற்றும் நைட்ரோஃபுரான்டோயின் போன்ற ஆன்டி-பயோட்டிக்குகள், மெதோகார்பமோல் போன்ற தசை வலி நிவாரணிகள் அல்லது கஸ்கரா மற்றும் சென்னாவுள்ள மலமிளக்கிகள் போன்றவற்றால் சிறுநீரானது அடர் ப்ரவுன் வெளியேறும்.
சிவப்பு அல்லது பிங்க்
பீட்ரூட், சிவப்பு தண்டுக்கீரை மற்றும் ப்ளூபெர்ரீஸ் போன்ற அடர் நிற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டால் சிறுநீரானது சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் வெளியேறும். ரத்தக்கசிவு அல்லது பிரச்னை இருந்தாலும் சிறுநீரானது சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் வெளியேறலாம்.
பச்சை
பொதுவாக பச்சைநிறமி கலந்த உணவுகளை உண்ணுவது சிறுநீர் பச்சை நிறத்தில் வெளியேற காரணமாகலாம். இதுதவிர சிறுநீர்ப்பாதையில் தொற்றை ஏற்படுத்தும் சூடோமோனாஸ் பாக்டீரியாவானது சிறுநீரின் நிறத்தை பச்சையாக மாற்றிவிடும்.
நீலம்
சிறுநீரம் மற்றும் சிறுநீர்ப்பை போன்றவற்றின் ஆரோக்கியத்தை கண்டறிய சோதனையின்போது கொடுக்கப்படும் நிறமியானது சிறுநீரை நீல நிறமாக்குகிறது. இதுதவிர, மிட்ரிப்டைலைன், இண்டோமெதாசின், சிமெடிடின் மற்றும் ப்ரோமெதாசின் போன்ற மருந்துகள் சிறுநீரை நீலம் அல்லது நீல - பச்சையாக மாற்றுகின்றன. blue diaper syndrome என்று சொல்லக்கூடிய அரிய பரம்பரை நோயானது சிறுநீரை நீல நிறத்தில் மாற்றிவிடும்.
கலங்கலான வெள்ளை
கால்சியம் அல்லது பாஸ்பேட் போன்ற ஒருசில புரதங்கள் மற்றும் மினரல்கள் உடலில் அதிகளவில் இருப்பதை இது உணர்த்துகிறது. சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்பட்டாலோ அல்லது சிறுநீரகத்தில் மினரல்கள் சிறு கற்களாக சேர்ந்தாலோ மிகுந்த வலி ஏற்படும். இதனைத்தான் சிறுநீரகக் கற்கள் என்கிறோம். எனவே அதிக தண்ணீர் குடிப்பதுடன், காய்ச்சல் மற்றும் குளிர் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும்.
நுரை
உடலில் அதிகப்படியான நீர் இருந்தால் எப்போதாவது இதுபோன்று நிகழ்வதுண்டு. ஆனால் இதே நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவேண்டும். உடலில் அதிகப்படியான புரதம் சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அல்லது சிறுநீரகத்தில் பிரச்னை இருக்கலாம். தொற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம்.