சென்னை: பெண்கள் விடுதியில் செல்போனில் பேசிய 3 பேருக்கு மின்சாரம் தாக்கி காயம்

சென்னையிலுள்ள ஒரு பெண்கள் விடுதியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த மூன்று பெண்களுக்கு மின்சாரம் தாக்கி காயம் ஏற்பட்டது.

சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரி, திருநீர்மலை ரோட்டில் இயங்கி வரும் நடராஜன் பெண்கள் விடுதியில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை 9 மணியளவில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கும்கும் குமாரி(19) என்ற பெண் தனது பெற்றோரிடம் பேசுவதற்காக 3வது மாடியில் நின்றுகொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது துணை மின்நிலையத்திற்கு செல்லும் 110 கேவி கொண்ட உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து கதிர்வீச்சு செல்போனில் தாக்கி அப்பெண் எரிந்து 70% தீக்காயமடைந்தார்.

image

கீழ்த்தளத்தில் உள்ள அறையில் இரண்டு பெண்கள் சார்ஜ் போட்டவாறு செல்போன் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அவர்களுக்கும் மின்சாரம் தாக்கி லேசான காயம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 70% தீக்காயம் அடைந்த பெண்ணுக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தை தொடர்ந்து விடுதியில் இருந்த அனைத்து பெண்களையும் பத்திரமாக வெளியேற்றினர். இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post