இருசக்கர வாகனம் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்ற அரசுப் பேருந்து - 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கர்நாடக மாநில அரசுப் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர். அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். ராணுவ வீரரான இவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இன்று காலை அதேப் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பருடன், கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி என்கிற இடத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினரை பார்க்கச் சென்றுள்ளார். பின்னர் இருசக்கர வாகனத்தில் சுந்தரேசன், கணேசன் ஆகிய இருவரும் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை கடந்து மாற்று சாலையில் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்து திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பேருந்தின் கீழ் இரு சக்கர வாகனம் சிக்கிக் கொண்டது. மேலும் சிறிது தூரம் இருசக்கர வாகனத்தை பேருந்து இழுத்துச் சென்றது. இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சுந்தரேசன், கணேசன் இருவரும் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததால், மளமளவென்று தீ பேருந்துக்கு பரவியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறக்கப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது.

image

இருப்பினும் தீ பரவியதில் பேருந்து முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இதனால் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து குந்தாரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரி தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில் சாலையை கடக்க, மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தடுப்புப் பகுதி தாண்டி திடீரென மாற்று சாலைக்கு இரு சக்கர வாகனம் வந்ததால், அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் சாலையை கடப்போரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post