ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்- நாளை துவங்கி வைக்கிறார் முதல்வர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு சென்னை தீவுத்திடல் எதிரே உள்ள அன்னை சத்யா நகர் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

தைப்பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் முழுக் கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதற்காக அரசு ரூ. 2,429 கோடி ஒதுக்கியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் இதற்கான வழிகாட்டுதல்கள் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொருவருக்கும் 6 அடி உயரம் உள்ள செங்கரும்பு தோகையுடன் வழங்கப்பட வேண்டும் என்றும், 500 ரூபாய் தாள்கள் 2 கையில் கொடுக்க வேண்டும் என்றும், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை தரமானதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

image

நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க, ஒவ்வொரு தெருக்கள் வாரியாக எப்போது வந்து மக்கள் பொங்கல் பரிசை வாங்க வரவேண்டும் என்று டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் இல்லாதவர்கள் 13-ந்தேதி சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி ஒவ்வொரு நியாய விலைக் கடைகளுக்கும் ஏற்கனவே பச்சரிசி, சர்க்கரை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று முழுக்கரும்பு மற்றும் பணம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம், தமிழ்நாடு முழுவதும் நாளை தொடங்கப்படுவதையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு செல்லும் வழியில் போர் நினைவுச் சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள நியாய விலைக் கடைக்கு சென்று இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post