கடலூர் அரசு மருத்துவமனையில் காதுக்கு ஆப்ரேஷன் செய்ததில் கண்ணை மூட முடியவில்லை என செந்தில்குமார் என்பவர், மாவட்ட ஆட்சியிடம் புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா உட்பட்ட ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கடந்த ஜூலை மாதம் கடலூர் அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் மூலம் காது வலியிருப்பதாக அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன் பிறகு அவர் வாய் ஒருபுறம் இழுத்துக் கொண்டும், ஒரு கண் மூட முடியாமலும் இருந்து வருகிறது. இதுகுறித்து மருத்துவமனையில் தெரிவித்தபோதும் அவர்கள் அதை கவனிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பிரச்சனை தவறான சிகிச்சையின் மூலமாகத்தான் வந்தது என மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால், கடந்த நான்கு ஐந்து மாதமாக கண் மூட முடியாத நிலையில் கண்ணில் பூச்சி கடித்துவிடக்கூடாது என்று இரவில் கண்ணில் பிளாஸ்டர் ஒட்டிக்கிட்டும் வாய் மூட முடியாததால் வாயிலும் பிளாஸ்டர் ஒட்டி தூங்குவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கண்ணிலும், காதிலும் தண்ணீர் ஒழுகி கொண்டே இருக்கிறது என்றும், இது சம்பந்தமாக தன்னிடம் சுகாதாரத்துறை விசாரணை நடத்தினார்கள், ஆனால் இதுவரை எந்தவிதமான மாற்று நடவடிக்கைவும் எடுக்கவில்லை, நிவாரணமும் வழங்கப்படவில்லை என இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் அளித்துள்ளார்.
தற்போது இதனை மாவட்ட சுகாதாரத்துறை விசாரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.