கொடுத்த கடனை திரும்ப வாங்குவதற்காக உரிமையாளர்கள் பல விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கேள்விப்பட்டிருப்போம். அதே வேளையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அதில் இருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்று கடன்தாரர்கள் செய்யும் சில நடவடிக்கைகள் பற்றியும் அறிந்திருப்போம்.
அந்த வகையில், இந்தோனேஷியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் செய்த நூதன வேலை குறித்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, லிசா டெவி ப்ரமிதா என்ற அந்த பெண் தான் வாங்கிய கடனை கொடுக்காமல் இழுத்தடித்து வந்திருக்கிறார்.
வேறு வழியில்லாமல் கடன் கொடுத்த பெண் லிசாவிடம் கெடு விதித்திருக்கிறார். ஆனால் அந்த கெடுவை தாண்டிய பிறகும் லிசா வாங்கிய கடனை அடைத்த பாடில்லை. ஏனெனில் அவரால் அந்த பணத்தை கொடுக்க முடியாத சூழல் இருந்தததால் கடனை அடைக்காமல் இருந்திருக்கிறார்.
இப்படி இருக்கையில், இந்த கடன் பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக தன்னை இறந்த சடலம் போல பாவித்து ஃபோட்டோ எடுத்து மகனின் மூலம் ஃபேஸ்புக்கில் ஃபோட்டோவையும் பகிரச் செய்திருக்கிறார் லிசா.
கடன் கொடுத்த மாயா குணவன் என்ற பெண் லிசாவிடம் கொடுத்த 22 ஆயிரம் ரூபாயை வாங்க முடியாமல் இருந்த நிலையில் கடந்த டிசம்பர் 11ம் தேதிதான் லிசா இறந்துவிட்டதாக செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். இது குறித்து லிசாவின் மகனிடம் மாயா விசாரித்த போது தமியாங் என்ற பகுதியில் லிசாவின் உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார்.
அந்த தமியாங் என்ற இடம் மாயா வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்ததால் மாயாவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதனையடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட லிசாவின் ஃபோட்டோவை ஆராய்ந்து பார்த்த பிறகுதான் உண்மை புலப்பட்டிருக்கிறது. அதாவது வேறொரு பெண்ணின் ஃபோட்டோவை எடுத்து தான் இறந்துவிட்டதாக லிசா ஃபோட்டோ போட்டிருக்கிறார் என்பதை மாயா கண்டறிந்திருக்கிறார்.
இதனையடுத்து லிசாவின் மகனிடம் இது குறித்து கேட்ட போது , கடனில் இருந்து தப்பிப்பதற்காக இப்படி செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இருப்பினும் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இறந்ததாக நாடகமாடப்பட்ட லிசா காணாமல் போனதோடு, மாயாவின் பணமும் திருப்பி கொடுத்தபாடில்லை.