மதுரையில் எய்ம்ஸ் விரைவில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார்.
தலைநகர் டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா-வை நேரில் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், அச்சந்திப்புக்குப் பின் மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் மருத்துவக் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி, புதுச்சேரி அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், போதைப்பொருள் மறுவாழ்வு மையம், தொற்றுநோய் மருத்துவமனை ஆகியவை தொடங்குவது குறித்தும் பேசினார் அவர்.
இதைத் தொடர்ந்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை தர வேண்டும் என என் பிரதான கோரிக்கையை அமைச்சரிடம் முன் வைத்தேன்.
தொடர்ந்து தனி மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க பணிகள் மேற்கொண்டு வருகிறோம். மேலும் உலகத்தரம் வாய்ந்த போதை பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க கோப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களை புதுப்பிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிகழ்வில் குறிப்பாக, தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் அமைக்க பணிகள் தாமதமாவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், விரைவில் எய்ம்ஸ் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்ததாக ஆளுநர் தமிழிசை கூறினார். மேலும், ஒப்பந்த நிறுவனத்தின் கால தாமதத்தால் பணிகள் தாமதம் ஆகிறது என்றும், இரண்டு வாரத்திற்குல் ஒப்பந்தத்தில் அனைத்தும் விரைவு படுத்தப்பட்டு மிக விரைவில் மதுரை எய்ம்ஸ் இயங்க தொடங்கும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக கூறினார்.