சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் தரமறுத்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் தர மறுத்த வழக்கில் மகேஸ்வரன்-க்கு ஜாமீன் வழங்கியும், ராமச்சந்திரன்-சுதா இருவரின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமச்சந்திரன் மற்றும் சுதா இருவர் மீதும் ஏற்கனவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சில சிறுவர்கள் திண்பண்டங்கள் வாங்கச் சென்றுள்ளனர். ஊர்க்கட்டுப்பாடு காரணமாக திண்பண்டம் வாங்க வரக் கூடாது எனவும், வீட்டில் போய் சொல்லுங்கள் எனவும் கூறி கடைக்காரர் சிறுவர்களுக்கு திண்பண்டம் தர மறுத்துள்ளார்.

image

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் கடை உரிமையாளர் மகேஸ்வரன், ராமச்சந்திரன் மற்றும் சுதா ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தனி தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

image

இந்நிலையில் இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'கடை உரிமையாளரான மகேஸ்வரன் மறு உத்தரவு வரும் வரை திருச்சியில் தங்கியிருந்து திருச்சி கீழமை நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 மேலும் ராமச்சந்திரன், சுதா இருவர் மீதும் ஏற்கனவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு நிலுவையில் இருப்பதால், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து இருவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Post a Comment

Previous Post Next Post