
கல்லணையை கட்டிய கரிகாலச் சோழன் புகழை உலகம் போற்றும் வகையில், சுமார் 1,000 மாணவிகள் பங்கேற்று 'பசுமையும், பாரதமும்' என்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கல்லணையில் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர். தமிழக பண்பாடு மற்றும் சுற்றுலா துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, ஜெட்லி உலக சாதனை புத்தகத்தில் பதியப்படவுள்ளது.
தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களில் கல்லணை முக்கியமான ஒன்றாகவும், திருச்சி - தஞ்சை மாவட்ட எல்லையின் இணைப்பு பாலமாகவும் விளங்குகிறது. இங்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக மாமன்னன் கரிகால சோழபெருவளத்தான், தறி கட்டு ஓடிய காவிரி நீரை தடுக்க, ஆற்றின் குறுக்கே கல், மண், மரம் போன்ற பொருட்களை கொண்டு அணையை கட்டி, பாசனத்துக்கு தண்ணீரை கொடுத்து வேளாண் தொழிலை செழிக்கச்செய்தார்.

இன்றைய நவீன வசதிகள் இல்லாத காலத்தில், கட்டப்பட்ட கல்லணை, இன்றும் பழந்தமிழர்களின் தொழில்நுட்ப திறமையையும், சோழர்களின் பெருமையையும் பறைசாற்றிவருகிறது. இது தொடர்ந்து தமிழ் நாட்டிற்கு பெருமையையும் சேர்த்துவருகிறது. உலகில் முதன் முதலில் அணை கட்டிய பெருமையுடைய கரிகாலசோழ பெருவளத்தானின் பெருமைகளை நினைவு கூறும் வகையில், கரிகால சோழன் கட்டிய கல்லணையில் தமிழக பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறையும் இணைந்து பசுமையும் பாரதமும் நாட்டியாஞ்சலி மற்றும் ஜெட்லி உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதனை தஞ்சை மாவட்ட மேயர் சன் ராமநாதன், திருச்சி மாவட்ட மேயர் அன்பழகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள். கல்லணையில் நடந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இயற்கை அன்னை காவிரி தாயையும், கரிகால சோழனின் பெருமையும், வேளாண் பெருமைகளையும் போற்றும் வகையில், மூன்று பாடல்கள் இசைக்கப்பட்டது.

அதில் தமிழகம் முழுவதுமுள்ள 60 நாட்டிய பள்ளிகளில் இருந்து வந்திருந்த ,1000 மாணவிகள், நாட்டிய கலைஞர்களுக்கான சீருடையில், நாட்டியம் ஆடி தங்களது திறமைகளையும் வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு கேடயமும், உலக சாதனைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News