பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே சூரத், பனாரஸ், காஞ்சிபுரம் உள்ளிட்ட இந்திய நகரங்கள் நெசவுக்கு பெயர் போனவை. இங்கு நெய்யப்பட்ட பட்டு சேலைகள், துணிரகங்கள் பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்போது இவை கைத்தறிகளால் நெய்யப்பட்டன. இதை சிறப்பிக்கும் விதமாக ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று கைத்தறி நெசவாளர்கள் தினம் கொண்டாடப்படும் வேளையில், நம் உள்நாட்டு கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சோக நிகழ்வை இத்தொகுப்பில் நினைவு கூறலாம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் அறிமுகமான ஜவுளி; நலிவடைந்த கைத்தறி:
1828 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பெண்டிங் பிரபு, “பருத்தி நெசவாளர்களின் எலும்புகள் இந்தியாவின் சமவெளிகளை வெளிறச் செய்தன” என்று குறிப்பிட்டார். அந்த அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் அளவுக்கு நெசவுத் தொழில் திகழ்ந்த காலகட்டத்தில் அதற்கு போட்டியாக விசைத்தறியை களமிறக்கினர் ஆங்கிலேயர். அப்போது இந்தியாவில் அதிகம் விளைவிக்கப்பட்ட பருத்தி பெரும்பாலும் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஏனெனில் இந்தியாவில் விளையும் பருத்தியை நூற்கும் அளவுக்கு இந்திய கைத்தறி நெசவாளர்களால் இயலவில்லை. அதே வேளையில் ஆங்கிலேயர்கள் விசைத்தறி மூலம் இந்தியாவில் இருந்து பருத்தியை நூற்று, ஜவுளியாக்கி அதை இந்தியாவுக்கே அனுப்பி கொள்ளை லாபம் பார்க்கும் வேளையில் இறங்கினர். 1830 ஆம் ஆண்டு இந்தியாவுக்கான பிரிட்டனின் ஜவுளி ஏற்றுமதி 6 கோடி யார்டுகளாக இருந்த நிலையில், (ஒரு யார்டு = மூன்று அடி) 1870 ஆம் ஆண்டு 100 கோடி யார்டுகளாக அதிகரித்து இருந்தது. பெரும் நெசவாளர்கள் அனைவரும் பிச்சைக்காரர்களாகும் அளவுக்கு, பிரிட்டன் ஆதிக்கம் ஆடை வணிகத்தில் வந்திருந்தது.
சட்டங்களை பயன்படுத்தி கைத்தறியை முறிக்க நினைத்த பிரிட்டிஷார்:
பிரிட்டன் அரசாங்கம் கைத்தறி ஆடைகளை பின்னுக்குதள்ளி தனது ஜவுளியை முன்னிலைப்படுத்த வர்த்தக மற்றும் கடன் முறைகளையும் கையாண்டது. இந்தியாவின் கைத்தறி நெசவில் ஆழமாக ஊடுருவியிருந்த வர்த்தகர்களை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு ஏராளமான கைத்தறி நெசவாளர்களை, கைவினைஞர்களை நிற்கதியற்ற நிலைக்கு நிறுத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு அவர்களது தொழில் அடியோடு முடக்கப்பட்டது. இது இந்தியாவில் பிரிட்டன் ஜவுளியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கட்டை விரலை தியாகம் செய்தனரா கைத்தறி நெசவாளர்கள்?
கைவினைஞர்களின் தயாரிப்புகள் சந்தையில் பாதிவிலைக்கு விற்பனை செய்யப்பட்டது. பிரிட்டன் அரசிற்காக மட்டுமே வேலை செய்வோம் என்று உறுதிமொழிப் பத்திரங்களில் பல கைவினைஞர்கள் கையெழுத்திடுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அவ்வாறு கையெழுத்திட்ட கைவினைஞர்கள் சந்தையில் தங்களது பொருட்களை விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இந்த கட்டாய கொத்தடிமைத்தனமான உழைப்பு பெருஞ்சுமையாக மாறி கைவினைஞர்களை கடுமையாக பாதித்தது. இப்படிப்பட்ட வேலையை செய்யாமலிருக்க வேண்டும் என்பதற்காக நெசவாளர்கள் கைத்தறி நெய்வதற்கான முக்கிய தேவையான தங்கள் கட்டைவிரல்களை வெட்டிக் கொண்ட சம்பவங்கள் நடைபெற்றதாக அ.இ.மெதவோய் எழுதிய “இந்திய பொருளாதாரம்” (சோவியத் புத்தகம்) என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டை விரல்களை வேண்டுமென்றே வெட்டினார்களா ஆங்கிலேயர்கள்?
இந்தியாவில் ஆடை விலை மிகவும் மலிவாக இருந்த கால கட்டத்தில்தான் பிரிட்டனின் ஜவுளி உற்பத்தி வளரத் துவங்கியது. அதனால் பிரிட்டன் ஆடைத் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு போட்டியாக அதுவும் மலிவு விலையில் ஆடைகளைத் தயாரிக்கும் கைத்தறி நெசவாளர்க்ளை ஒழிக்க பல வகைகளில் திட்டம் தீட்டினர். கிழக்கிந்திய கம்பெனியின் படைவீரர்கள் அந்த திட்டங்களை சிரமேற்கொண்டு செயல்படுத்தினர். இவர்கள் வங்காள நெசவாளர்களின் தறிகளை அடித்து நொறுக்கினர். அப்போது பல திறமையான கைத்தறி நெசவாளர்களின் கட்டை விரல் முறிக்கப்பட்டதாகவும் சமகாலக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் எழுதிய இந்தியாவின் இருண்ட காலம் என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் இந்திய நெசவாளர்கள் எத்தகைய கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை விரிவாக பதிவு செய்துள்ளார்.
சுதேசி இயக்கம்:
இப்படி ஏகலைவன்களை கட்டைவிரல்களை பலிகொடுத்த கைத்தறி நெசவாளர்கள் வெகுண்டெழுந்து 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று சுதேசி இயக்கத்தை துவங்கினர். இது உள்ளூர் தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் துவக்கப்பட்டது. அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடுவது என 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று கைத்தறி நெசவு தினம் கொண்டாடப்படும் வேளையில், கட்டைவிரல்களை களப்பலியாக்கியவர்களையும் நம் நெஞ்சில் ஏந்தி, சுதேசி ஆடைகளை அணிய உறுதி ஏற்போம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News