விவசாயத்தை மையமாக வைத்து மோடி தலைமையில் ராம ராஜ்ஜியம் அமையும் - அண்ணாமலை

விவசாயத்தை மையமாக வைத்து இந்தியாவில் மோடி தலைமையிலான ராம ராஜ்ஜியம் அமையும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு கடந்த மூன்று நாட்களாக சேலத்தில் நடைபெற்று வந்தது. இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது... விவசாயம் செய்து பிழைக்க முடியாது என்று கருதிக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் விவசாயம் செய்து பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையi ஊட்டியவர் பிரதமர் மோடி . இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் சொட்டு நீர் பாசனம், ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

கடந்த 70 ஆண்டு காலமாக அரசியல் நோக்கத்தினால் தேர்தல் வரும்போது விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. பாலை கொம்பில் இருந்து கறக்க வேண்டுமா? காம்பில் இருந்து கறக்க வேண்டுமா? என்று தெரியாமல் தமிழக விவசாயிகள் விவசாய சட்டத்தை எதிர்த்து வருவதாகக் கூறிய அவர், விவசாயிகளுக்கு என கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கடன் பெறும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று விழுக்காடு வட்டி விகிதம் மட்டுமே விதிக்கப்படும். கிசான் கிரெடிட் கார்டு மூலம் இதுவரை 83 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

image

மக்களை ஏமாற்றி மக்களுடன் இருப்பதாக புகைப்படங்களை எடுத்து விளம்பரப்படுத்தி வாக்கு வாங்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு 15 மாதமாக ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய் அமைக்க முடியாமல் திணறி வருவது வெட்கக்கேடாக உள்ளது, இந்த விடியா அரசு பாஜகவை பற்றி விமர்சனம் செய்ய எந்த தகுதியும் இல்லை. விவசாயிகளுக்கு தோள் கொடுப்பதாக வெறும் பேச்சை மட்டும் பேசி வருகிறது

கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை. விவசாய உள்கட்டமைப்பு நிதிக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் மாவட்டத்திற்கு ஒரு கிடங்கு, வேளாண் பொருட்களை வைப்பதற்கு இடம், ரயில் மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல தனி பெட்டி என பல திட்டங்களை மத்திய அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது.

image

ஈரானில் இருந்து பெருங்காயம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் மோடி பொறுப்பேற்ற பிறகு இந்தியாவிலேயே பெருங்காய உற்பத்தி நடைபெற்று தற்போது தன்னிறைவு பெற்றுள்ளது. சிக்கிம் மாநிலத்தை போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி விவசாயம் நூறு விழுக்காடு நடைபெற உள்ளது. ஆனால், தமிழகத்தில் ரசாயன பொருட்களை பயன்படுத்தி மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாயத்திற்கு மாற்றாக இயற்கை வேளாண் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த தயங்குவதாக தெரிவித்த அவர் , எதிர்வரும் காலத்தில் நம்மாழ்வாரை பின்பற்றி பாஜக செயல்படும்.

இந்த விவசாய மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை ஆலோசித்து மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்படும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் என்ற கோட்பாடுகளை கொண்ட ராம ராஜ்ஜியம் மோடி தலைமையில் உருவாக தான் போகிறது அது விவசாயத்தை வைத்துதான் நடக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post