தேனி பெரியகுளத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ். திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் ஈ.பி.எஸ். நடத்திய பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓ.பி.எஸ். தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் முகாமிட்டுள்ளார். அவரை அவரது ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து வந்து சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஓ.பி.எஸ். ஆல் நியமிக்கபட்ட தென்காசி, நெல்லை, திருவாரூர் மாவட்ட செயலாளர்கள், 300-க்கும் மேற்பட்ட ஓ.பி.எஸ். ஆதரவு கட்சி நிர்வாகிகளுடன் பெரியகுளத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வந்து ஓ.பி.எஸ்.ஸிடம் ஆசி பெற்றனர்.
பின்னர் மாவட்ட செயலாளர்களுடன் தனியாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டு, அங்கு வந்த தொண்டர்களை சந்தித்து பேசினார். இதனிடையே ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை குழப்பத்தில் வைத்து உள்ளார் என்றும், அவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்தால், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினரை ராஜினாமா செய்யச்சொல்லி தேர்தலில் நின்று ஜெயித்து காட்ட வேண்டும் என்றும், அதிமுகவில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஓ.பி.எஸ். பக்கமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அதிமுகவில் தற்போது உள்ள பெரும்பாலான நிர்வாகிகள், ஓ.பி.எஸ். கையெழுத்திட்டு நியமிக்கப்பட்டவர்களை ஈ.பி.எஸ். நீக்கம் செய்ய தயாராக இருக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பினார். சமீபகாலமாக அதிரடி அரசியலில் இறங்காமல் அமைதி காத்து வந்த ஓ.பி.எஸ். மீண்டும் அதிரடி நடவடிக்கையில் இறங்க உள்ளதாகவும், இதற்காகதான் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News