பேச்சுவார்த்தையில் 99 சதவீத கோரிக்கைகள் ஏற்பு - போக்குவரத்து தொழிற்சங்கங்கள்

பேச்சுவார்த்தையில் 99 சதவீத கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

போக்குவரத்து துறையில் ஒட்டுநர், நடத்துநர், டெக்னீசியன் உள்ளிட்ட 1.50 லட்சம் ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு, பேச்சுவார்த்தை மூலமாக நிறைவேற்றப்படும். இதில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 2019 செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா நெருக்கடி, ஆட்சி மாற்றம் என தொடர் தாமதம் காரணமாக பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இதில் 5 முறை தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைக்கு அரசு கவனம் செலுத்தவில்லை என சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.

பேச்சுவார்த்தைக்கு அழைத்த தமிழக அரசு

வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் ஆகஸ்ட் 3-ம் தேதி பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பும், அதேபோல் வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டாம் என போக்குவரத்து கழகங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இன்று நண்பகல் 12 மணியளவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் செயலாளர் கோபால், போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஊதியத்தை கணக்கிடும் பே- மேட்ரிக்ஸ் முறையில் 5 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எனவே பேச்சுவார்தை தொடரும் என்று போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

image

பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்பு - அமைச்சர்:

“அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தால் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய பே-மேட்ரிக்ஸ் முறையில் ஊதியம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளோம். இதை எப்போது இருந்து அமலாக்குவது, எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். நிதித்துறை ஒப்புதல் பெற வேண்டி உள்ளதால் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும். ஓய்வூதியர்களுக்கு 81 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

image

99 சதவீத கோரிக்கைகள் ஏற்பு - தொழிற்சங்கங்கள்:

தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேசிய மு.சண்முகம், “அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தால் ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டை சரிசெய்து பே- மேட்ரிக்ஸ் முறையில் 5 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்கள் போராடியதால் சர்வீஸ் குறைக்கப்பட்டு, பல தண்டனைகள் தரப்பட்டு, பல்வேறு இழப்புகளை சந்தித்தனர். இதனை சரி செய்து சீனியாரிட்டி வழங்க அரசு ஒப்புக்கொண்டது. பல்வேறு படிகளை உயர்த்தவும், மகளிர் பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களின் பேட்டா பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் பிக்ஸ்ட் பேட்டா வழங்கவும் ஒப்புக்கொண்டனர்.

image

போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விடுமுறைகள் வழங்குவதை தவிர்க்க பொதுவான நிலையாணை கோரினோம். அதற்காகாக ஒரு குழு அமைத்து ஆணையிட்டுள்ளனர். அந்தக் குழு அனைத்து சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். தொழிலாளர் எண்ணிக்கையை ஒரு பேருந்துக்கு 7.5 விழுக்காடு என்றிருந்ததை அதிமுக ஆட்சியில் 6.5 விழுக்காடாக குறைத்து விட்டது. அதை மீண்டும் 7.5 விழுக்காடாக மாற்ற. ஒப்புக்கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

image

மேலும், “பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெற்று, 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் முன்வைத்த 99 விழுக்காடு கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒப்பந்த காலத்தை 4 ஆண்டுகளாக மாற்றுவது‌ மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைபடி நிலுவை வழங்க வேண்டும் ஆகிய இரு விவகாரத்தால் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.” என்று கூறினார் சண்முகம்.

image


from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post