ஆரோக்கியத்தை புறக்கணித்து உணவு முறைகளை மாற்றி வருவதாலும், அதிகரித்து வரும் வேலைப்பளுவால் ஏற்படும் முறையற்ற தூக்கத்தின் காரணமாகவும் தற்காலத்து மக்கள் எக்கச்சக்கமான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் உயர் ரத்த அழுத்த நோயால் ஏற்படும் விளைவுகள் பற்றிதான் தற்போது பார்க்கப் போகிறோம்.
ஹைப்பர் டென்ஷன் என அழைக்கக் கூடிய இந்த உயர் ரத்த அழுத்தம் வராமல் கட்டுப்படுத்த ரத்த அழுத்தத்தை 80/120 என்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூறுகிறது. அதாவது குறைந்த அளவு BP-ஐ 80 அல்லது அதற்கு கீழும், அதிகளவு BP-ஐ 120க்கு குறைவாக வைத்திருக்க வேண்டுமாம்.
இல்லாவிடில், தமனிகள் இரத்த நாளங்களின் சுவர்களை சேதப்படுத்தி தீவிர ரத்த அழுத்தத்தை உணரச் செய்யும். இதன் காரணமாகத்தான் அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பு ஏற்பட்டால் இதயத்துக்கான ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தை அனுமதிக்காது தீவிர தாக்குதலை உண்டாக்கி உயிரையே காவு வாங்க வைக்கும்.
ஆகவேதான் உயர் ரத்தம் அழுத்தம்தானே என்று அலட்சியாக இருந்தால் அதனால் அபாயகரமான பக்கவாதமும், மாரடைப்புமே ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இவை ஏதும் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளாத வரையில் எந்த அறிகுறியை பற்றியும் அறிந்திருக்க மாட்டீர்கள் என எச்சரிப்பதோடு, அதன் காரணமாகத்தான் உயர் ரத்த அழுத்தத்தை ஒரு சைலண்ட் கில்லர் எனவும் அழைக்கிறார்கள்.
எனவே உங்கள் உடலில் இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதைக் குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன. அவற்றைப் புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகவும் அறிவுறுத்துகிறார்கள்.
கடுமையான தலைவலி, மங்கலான பார்வை, மன தெளிவின்மையை குறிக்கும் brain fog, மூச்சுத்திணறல், எப்போதுமே சோர்வாக உணர்தல், குமட்டல் ஆகிய புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகளாகும்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
வயது மூப்பு, மரபியல் மற்றும் உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளால் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படும். ஆனால் இதனை வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலமே கட்டுப்படுத்த முடியும்.
அதற்கான சில வழிமுறைகள்:
அதிகளவிலான உப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை நிறுத்த வேண்டும். முடிந்தால் வாரத்துக்கு ஓரிரு முறை உப்பு சேர்க்காத உணவுகளை உட்கொள்ளலாம்.
மது குடிக்கும் பழக்கத்தால் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி இதயத்துக்கு பெரிய பாதிப்பையே உண்டாக்கும். ஏற்கெனவே ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை எடுப்பவராக இருந்து மது அருந்தும் பழக்கமுடையவராக இருந்தால் வாரத்துக்கு ஒரு முறை என ஆல்கஹால் எடுத்துக் கொண்டு படிப்படியாக குறைப்பது நல்லது.
அதிகளவிலான மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பாடற்ற ஹைப்பர் டென்ஷன் ஏற்படும். அவர்கள் கட்டாயம் மெடிட்டேஷன் செய்வது, நல்ல இசையை கேட்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.
உடலையும் மனதையும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதால் இதயத்தின் ஆரோக்கியத்தையும் ரத்த ஓட்டத்தையும் சீராக்க உதவுகிறது.