`செஸ் குதிரைக்கு தம்பி என பெயரிட இதுதான் காரணம்’ - முதல்வர் பகிர்ந்த சுவாரஸ்ய பின்னணி!

தமிழ்நாடுதான் இந்தியாவின் செஸ் தலைநகரம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நான்கே மாதங்களில் செஸ் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் குறிப்பிட்டார்.

நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரமாண்ட தொடக்க விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா எழுச்சியுடன் நடைபெற்றிருப்பதாக தெரிவித்தார். சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய குறைந்தது 18 மாதங்கள் ஆகும் நிலையில், நான்கே மாதங்களில் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

image

செஸ் ஒலிம்பியாட் மூலம் விளையாட்டுத்துறை மட்டுமின்றி, சுற்றுலாத்துறையும் மேம்பாடு அடையும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது 20 ஆயிரம் பேர் பங்கேற்ற செஸ் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி நடத்தியதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

செஸ் குதிரைக்கு தம்பி என்று பெயர் வைத்தது பற்றி குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா தனது அன்புத்தொண்டர்களை தம்பி என்று அழைப்பதுதான் வழக்கம் என்றும், தம்பி என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும், நாமெல்லாம் ஒரே குடும்பம் என்பதை குறிப்பிடுவதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நாளாக, இத்தொடக்க விழா அமைந்துள்ளதாகவும், செஸ் விளையாட்டை இந்தியா முழுவதும் பரவச்செய்யும் விதமாக செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post