‘லைன்ல வந்ததுக்கு நன்றிங்க அண்ணா’- முதல்வருடன் ஆட்டோ ஓட்டுனர் பன்னீர்செல்வத்தின் ஆடியோ

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேலூரை சேர்ந்த எம்ஜிஆர் ரசிகரொருவர் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 29-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பிறகு சென்னை திரும்பிய முதல்வருக்கு வேலூர் மாநகரத்திற்குட்பட்ட சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ஆட்டோ ஓட்டுனர் பன்னீர்செல்வம் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

image

அந்தக் கடிதத்தில், “மாண்புமிகு முதல்வர் அவர்களே... நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது எனக்கு வாக்களித்த மற்றும் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையையும் காப்பாற்றும் விதத்தில் ஆட்சி செய்வேன் என்று கூறி இருந்தீர்கள். அந்த வகையில் உங்களின் சிறப்பான ஆட்சிக்கு உங்களுக்கு வாக்களிக்காத எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இந்த பன்னீர்செல்வத்தின் வாழ்த்துகள்.

நீங்கள் வேலூர் வருகை தந்த போது எந்தவித போக்குவரத்து இடையூறுகள் இல்லாமல் நாங்கள் நிம்மதியாக ஆட்டோ ஓட்டினோம். எங்கள் தொழில் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் வந்து சென்றதற்கான அறிகுறிகளே எங்களுக்கு தெரியவில்லை. இவை அனைத்தும் தங்களின் உத்தரவின் பேரில்தான் நடந்திருக்கும் என்பதை நான் அறிகிறேன். மேலும் நீங்கள் பல நல்ல திட்டங்களை தந்து தமிழ்நாட்டை முன்னேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டு விட்டது. வாழ்த்துக்கள் ஐயா" என குறிப்பிட்டு கலைஞருடன் எம்ஜிஆர் இருக்கும் புகைப்படமும், எம்ஜிஆர் உடன் மு.க.ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பியிருந்தார்.

image

இந்தக் கடிதத்தை படித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்டோ ஓட்டுனர் பன்னீர்செல்வத்திற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரிடம், `உங்களுடைய கடிதம் கிடைக்கப்பெற்றேன். என் செயல்பாடுகளை வாழ்த்தி எழுதியிருந்தீர்கள். மிக்க நன்றி’ எனக்கூறி, பன்னீர்செல்வம் என்ன வேலை செய்கிறார் எனக்கேட்டறிந்து `சூப்பர்’ எனப் பாராட்டும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் பன்னீர்செல்வத்திடம் நாம் பேசியபோது, `எம்ஜிஆர் ரசிகராகிய நான் முதல்வருக்கு எழுதிய கடிதத்திற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்த முதல்வரின் செயல் என் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கிறது’ என நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதை முதல்வருடனான உரையாடலின்போதும் அவர் தெரிவித்திருந்தார். முதல்வரிடம் `நீங்களே எனக்கு ஃபோன் செய்து பேசியது, ரொம்ப மகிழ்ச்சி அண்ணே’ என்று அவர் பேசியிருந்தார்.

- செய்தியாளர்: ச.குமரவேல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post