பொள்ளாச்சி: ஹாஸ்பிடலில் சிசிடிவி இல்லை; ஆனாலும் அதிரடி காட்டி குழந்தையை மீட்ட போலீஸ்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 22 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொடுவாயூரில் தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டுள்ளனர். தொடர்ந்து, குழந்தையை கடத்திய பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த யூனிஸ், திவ்யபாரதி தம்பதியினரின் பிறந்த நான்கு நாட்களேயான பெண் குழந்தையை நேற்று அதிகாலை நான்கு மணி அளவில் மர்ம நபர்கள் கடத்தியுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

image

அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாததால் மருத்துவமனை எதிரே அமைந்துள்ள வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இரண்டு பெண்கள் குழந்தையை ஆட்டோவில் கடத்தி சென்ற பதிவுகள் இருந்தது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் கோவை, திருப்பூர் மற்றும் பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் பாலக்காடு மாவட்டம் கொடுவாயூர் பகுதியில் ஒரு வீட்டில் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

குழந்தையை மீட்டவுடன், அதிகாலை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பெற்றோர்களிடம் குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அளித்த பேட்டியின்போது, “இந்தச் சம்பவத்தில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பொள்ளாச்சி, கோவை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் என பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணப்பட்டு தற்போது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

image

சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை எதற்காக கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்த காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், 22 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

- செய்தியாளர்:  ரா. சிவபிரசாத்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post