இப்போது ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிற அழகுசாதனப் பொருட்களில் ‘ரைஸ் வாட்டர் கொண்டு உருவாக்கப்பட்டது’ என பிரத்யேகமான விளம்பரங்களைப் பார்க்கமுடிகிறது. ஆனால் அரிசி கழுவிய தண்ணீரை சருமம் மற்றும் முடி பராமரிப்புக்கு பயன்படுத்துவது என்பது 1000 வருடங்களுக்கு முன்பு ஜப்பானில் பயன்படுத்தப்பட்ட முறை. இது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. பல்வேறு பிராண்டுகள் ரைஸ் வாட்டர் யுக்தியை பயன்படுத்தி விளம்பரப்படுத்துகின்றன. அரிசியை ஊறவைத்து கழுவிய தண்ணீர், சோறு வடித்து எடுக்கப்பட்ட சூடான கஞ்சி என இரண்டுமே சருமம் மற்றும் முடி பராமரிப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
சரும நிறத்தை அதிகரிக்க: அரிசி தண்ணீர் சரும நிறமிகளின்மீது செயல்பட்டு சரும நிறத்தை மேம்படுத்துகிறது. அதனால்தான் தற்போது விற்கப்படுகிற நிறைய அழகுசாதனப் பொருட்களில் அரிசி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
உடைந்த சருமம்: அரிசி தண்ணீரை நீண்டநேரம் வைத்தால் புளித்துவிடும். இந்த புளித்த தண்ணீர் சூரிய புற ஊதாக்கதிர்களால் உடைந்த சரும செல்களை சரிபடுத்துகிறது. மேலும் இது சருமத்தின் மிருதுத்தன்மையை அதிகரித்து சுருக்கத்தை தடுக்கும் கொலாஜன் அளவை அதிகரிக்கிறது.
வறண்ட சருமத்திற்கு: மார்க்கெட்டுகளில் விற்கப்படும் பெரும்பாலான சரும பராமரிப்பு பொருட்களில் சோடியம் லாயுரல் சல்பேட் (SLS) இருக்கிறது. இது சருமத்திற்கு எரிச்சலையும் வறட்சியையும் உண்டுபண்ணும். அரிசி தண்ணீர் சரும எரிச்சலை தணிக்கிறது.
எக்சீமா, பருக்கள் மற்றும் அரிப்பு: அரிசி தண்ணீர் சருமத்தை மிருதுவாக்குகிறது. இது முகப்பருக்கள், எக்சீமா(சிரங்கு), கருந்திட்டுக்கள் மற்றும் அரிப்பு போன்றவற்றை சரிசெய்கிறது.
அரிசி தண்ணீரை பயன்படுத்தும் வழிகள்:
1. க்ளென்சர் மற்றும் டோனராக அரிசி தண்ணீரை பயன்படுத்தலாம்
2. ஷாம்புவுடன் கலந்து பயன்படுத்தினால் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது.
3. அரிசி தண்ணீருடன், சிறிது உப்பு, சிறிது எண்ணெய் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை கலந்து உடல் முழுவதும் ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம்.
4. அரிசி தண்ணீர் சன் ஸ்க்ரீனாகவும் பயன்படுகிறது. கடைகளில் விற்கப்படுகிற சன் ஸ்க்ரீன் லோஷன்களில் மற்ற பொருட்களுடன் அரிசி தவிடு சாறும் கலந்திருக்கிறது. இது UVA/UVB கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News