ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் குப்பைத் தொட்டியில் உணவு தேடும் அவலம்

மசினகுடி பகுதியில் உணவு தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவம் அதிகரித்து இருக்கிறது.  யானைகள் குப்பைகளை உட்கொள்ளாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளது மசினகுடி கிராமம். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து காட்டு யானை ஒன்று குப்பைகளை உட்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதற்கு வன ஆர்வலர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

மசினகுடி கிராமம் என்பது முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்திருக்கிறது. சுற்றிலும் அடர் வனப் பகுதி என்பதால், முதுமலை வனத்திற்குள் இருந்து உணவு தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவது சமீபகாலமாக அதிகரித்து இருக்கிறது.

image

குறிப்பாக குப்பைத் தொட்டியில் இருந்த உணவை உட்கொண்ட யானை உட்பட 3 காட்டு யானைகள் சமீபகாலமாக ஊருக்குள் நடமாடி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவு தேடி ஊருக்குள் வந்த மக்னா யானை பகல் நேரத்தில் சாலையில் நடந்து சென்றது. அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவனல்லா பகுதியில் மான்கள் குப்பைகளை தின்ற காட்சிகளும் வெளியானது.

மசினகுடி பகுதியை பொறுத்தவரைக்கும் வனப்பகுதியில் இருந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். காட்டு யானை குப்பைத் தொட்டியில் குப்பைகளை தின்றது குறித்து மசினகுடி ஊராட்சி மன்றத்தலைவர் மாதேவியிடம் கேட்டபோது...

மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இனங்கவே அப்பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. மற்ற குப்பைகளை ஊராட்சி பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று வாங்கி வருகிறோம். குறிப்பிட்ட குப்பை தொட்டியில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வீணாகும் உணவு பொருட்கள் மட்டுமே அதில் கொட்டப்படுகின்றன.

குப்பைத் தொட்டியில் போடப்படும் குப்பைகள் அனைத்தும் காலையில் அப்புறப்படுத்தப்படும். குப்பைகளை அகற்றிய பிறகு புதிதாக போடப்பட்ட குப்பைகளையே, இரவு ஊருக்குள் வந்த யானை உட்கொண்டு இருக்கிறது. மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்ட குப்பை தொட்டி என்பதால் அதில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது இல்லை.

இருப்பினும் மீண்டும் காட்டு யானைகள் குப்பைத் தொட்டியில் போடப்படும் குப்பைகளை உட்கொள்ளாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post