
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பரணி நட்சத்திர தினமான நேற்று அமைச்சர் தலைமையில் தேர் இழுக்கப்பட்டது.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில், தமிழகம் மட்டுமின்றி கேரளா பக்தர்கள் இடத்திலும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் 2018-ஆம் ஆண்டு பக்தர்கள் நன்கொடை மூலம் உருவாக்கப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கத்தேர் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இதையடுத்து 2019ஆம் ஆண்டு முதல் பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக தங்கத்தேர் இழுக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்த நிலையில், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேர் மூடப்பட்ட அறையில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்டைக்காடு கோயில் கருவறையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின்பு நடைபெற்ற தேவ பிரசன்னத்தில் தங்கத் தேரை மாதம்தோறும் கோயிலை சுற்றி இழுத்து வரவேண்டுமென கூறப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து மாதந்தோறும் பரணி நட்சத்திர தினத்தன்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் தங்கத்தேர் கோயிலைச் சுற்றி இழுக்கப்படுகிறது. ஏனைய தினங்களில் 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக தங்கத் தேரை இழுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரணி நட்சத்திர தினமான நேற்றிரவு கோயிலைச் சுற்றி தங்கத் தேர் இழுக்கப்பட்டது. இதை தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் பக்தர்கள் தங்கத்தேரை இழுத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News