சினிமா பாணியில் பணத்துடன் சென்றவரை பின் தொடர்ந்து கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பாடி படவட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (41). இவர் மதுரவாயல் அருகே வானகரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி மதியம் விஜயகுமார் தனது கம்பெனியில் இருந்து ரூ.82 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பைக்கில் கொடுங்கையூரில் உள்ள கம்பெனிக்கு சென்றுள்ளார்.
அப்போது தாம்பரம்- புழல் புறவழிச்சாலை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வந்தபோது, மற்றொரு பைக்கில் வந்த 3 பேர் வழிமறித்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் மல்லிகா தலைமையிலான போலீசார், வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இது தொடர்பாக சம்பவ இடம் மற்றும் வழித்தடங்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பல்சர் வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் பணத்தை பறித்துச் சென்றது பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் பள்ளிக்கரணை, பத்மாவதி நகர், ராஜேஸ்வரி தெருவைச் சேர்ந்த சந்துரு (18), அப்பு என்கின்ற ஸ்ரீகாந்த் (20), மேடவாக்கம் நேசவாளர் நகர், காந்தி தெருவைச் சேர்ந்த டமால் என்கின்ற தனுஷ் (20) மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த மதுரவாயல் பாக்கியலெட்சுமி நகர் இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் (42) ஆகியோர் என தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் 4 பேர்களையும் கைது செய்தனர். தொடர்ந்து வழிப்பறி செய்த 82 லட்சம் பணத்தில் 72 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரு தொழிற்சாலையில் இருந்து மற்றொரு தொழிற்சாலைக்கு பணத்தை கொண்டு சென்ற ஊழியர் ஒருவரை திரைப்பட பாணியில்(வலிமை) சுமார் 10 கிலோ மீட்டருக்கும் மேலாக பின் தொடர்ந்து வந்து புறவழி சாலையில் பட்டபகலில் வழிமறித்து கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News