ஒரு மெய்டன் ஓவருக்கு, ஒரு தோல்வி பரிசு - டெல்லி, லக்னோ பெர்ஃபார்மென்ஸ் ஒரு ஒப்பீடு!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த போட்டியில் தோல்வியை தழுவியதற்கான காரணம் என்ன? இப்படி ஒரு கேள்வியை கேப்டன் ரிஷப் பண்டிடம் கேட்ட போது, 'நாங்கள் ஒரு 10-15 ரன்களை கூடுதலாக அடித்திருக்க வேண்டும்' என கூறினார். ரிஷப் பண்ட்டின் கூற்றுப்படி, டெல்லியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்த அந்த 15 ரன்கள் எங்கே துண்டு விழுந்தது?

இரண்டு அணிகளின் பெர்ஃபார்மென்ஸையும் ஒப்பிட்டு பார்த்தோமேயானால் டெல்லி அணியின் தோல்விக்கும், அதாவது ரிஷப் பண்ட் கூறிய அந்த 15 ரன்கள் வராமல் போனதற்கு ஒரு மெய்டன் ஓவர் மூலக்காரணமாக இருந்ததை அறிந்துக்கொள்ள முடியும். டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இந்த இரண்டு அணிகளின் பேட்டிங் பெர்ஃபார்மென்ஸையும் பவர்ப்ளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என பகுதிவாரியாக பிரித்துக் கொள்வோம்.

image

முதலில் பேட் செய்த டெல்லி அணி 1-6 பவர்ப்ளே ஓவர்களில் 52 ரன்களை எடுத்திருந்தது. விக்கெட்டுகள் எதையும் இழந்திருக்கவில்லை. சேஸ் செய்த லக்னோ அணி 1-6 பவர்ப்ளேயில் 48 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியும் விக்கெட்டுகள் எதையும் இழக்கவில்லை. ஏறக்குறைய பவர்ப்ளேயில் இரண்டு அணிகளுமே ஒரே மட்டத்திலான பெர்ஃபார்மென்ஸையே செய்திருக்கின்றனர்.

தொட்டக்கத்தை பார்த்துவிட்டோம். அடுத்ததாக முடிவை பார்த்துவிடுவோம். 16-20 இந்த டெத் ஓவர்களில் டெல்லி அணி 50 ரன்களை அடித்திருக்கிறது. ஒரு விக்கெட்டை கூட இழந்திருக்கவும் இல்லை. இதே டெத் ஓவர்களில் லக்னோ அணி சேஸிங்கின் போது 44 ரன்களை எடுத்திருந்தது. 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், லக்னோ 19.4 வது ஓவரிலேயே இரண்டு பந்துகளை மீதம் வைத்து ஆட்டத்தை முடித்துவிட்டது. இந்த டெத் ஓவரிலும் இரண்டு அணிகளின் பெர்ஃபார்மென்ஸும் ஏறக்குறைய சமமாகத்தான் இருக்கிறது.

image

எனில், பிரச்சனை எங்கே எழுகிறது? மிடில் ஓவர்கள் அதில்தான் டெல்லி கேப்பிட்டல்ஸ் பின் தங்கியிருக்கிறது. 7-15 இந்த மிடில் ஓவர்களில் டெல்லி அணி 47 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், சேஸ் செய்த லக்னோ அணியோ இந்த மிடில் ஓவர்களில் 63 ரன்களை எடுத்திருந்தது. இரண்டு விக்கெட்டுகள இழந்திருந்தது. ரிஷப் பண்ட் சொன்ன அந்த 15 ரன்கள் வித்தியாசம் இங்கேதான் நிகழ்ந்திருந்தது. இந்த மிடில் ஓவர்களில் டெல்லி கூடுதலாக எடுக்க தவறிய 15 ரன்களுன் லக்னோ கூடுதலாக எடுத்த அந்த 16 ரன்களுமே ஆட்டத்தில் வெற்றிக்கும் தோல்விக்குமான வித்தியாசமாக அமைந்தது. லக்னோ இந்த மிடில் ஓவர்களில் எடுத்த அந்த கூடுதல் 16 ரன்கள்தான் அந்த அணியை இரண்டு பந்துகளை மீதம் வைத்து டார்கெட்டை எட்ட வைத்தது.

பிரச்சனையாக அமைந்த இந்த 7-15 மிடில் ஓவர்களை இன்னும் நுணுக்கமாக ஆய்ந்து பார்ப்போம். இந்த இடைப்பட்ட ஓவர்களில் டெல்லி அணி 47 ரன்களை அடித்திருந்ததல்லவா? அந்த 47 ரன்களை பிரித்து பார்த்தால் 28 ரன்கள் ஓடி எடுக்கப்பட்டதாக இருந்தது. 18 ரன்கள் பவுண்டரிகளிலும் சிக்சரிலும் வந்திருந்தது. ஒரு ரன் எக்ஸ்ட்ராவாக கிடைத்திருந்தது. லக்னோ அணி 63 ரன்களை அடித்திருந்ததல்லவா? அந்த 63 ரன்களில் 36 ரன்கள் ஓடி ஓடியே எடுக்கப்பட்டிருந்தது. 24 ரன்கள் பவுண்டரிக்களிலும் சிக்சரிலும் எடுக்கப்பட்டிருந்தது. எக்ஸ்ட்ரா வகையில் மூன்று ரன்கள் கிடைத்திருந்தது.

image

எக்ஸ்ட்ராக்களை ஒதுக்கிவிடுவோம். அவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஓடி எடுத்த ரன்களில் டெல்லி அணி லக்னோவை விட 8 ரன்களும் பவுண்டரிக்களில் 6 ரன்கள் என மொத்தமாக 14 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட ரிஷப் பண்ட் சொன்ன அதே 15 ரன்கள்தான்.

டெல்லி இந்த 14 ரன்களை எடுக்கத்தவறியதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது டாட் பால்கள். 7-15 இந்த மிடில் ஓவர்களில் லக்னோ அணி 19 டாட்களை ஆடியிருந்தது. ஏறக்குறைய மூன்று ஓவர்கள். ஆனால், டெல்லி அணியோ இந்த கட்டத்தில் 24 பந்துகளை டாட் ஆக்கியிருந்தனர். சரியாக 4 ஓவர்கள்.

கிருஷ்ணப்பா கௌதம் வீசிய அந்த 12 வது ஓவர்தான் டெல்லி அணியின் டாட் பால்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. அந்த ஓவரை ரிஷப் பண்ட் முழுவதுமாக மெய்டன் ஆக்கியிருப்பார். ஸ்கோர் சீராக முன்னேற வேண்டிய நேரத்தில் வந்த இந்த மெய்டன் ஓவரால் டெல்லி அணியின் ரன் விகிதம் பயங்கரமாக குறைய ஆரம்பித்தது. ஏற்கனவே, ரோவன் பவல் வேறு 9 பந்துகளில் வெறும் 3 ரன்களை மட்டுமே அடித்து ரன்ரேட்டை குறைத்திருந்தார். உடனடியாக இந்த மெய்டனும் சேர்ந்து கொள்ள டெல்லி அணிக்கு பிரச்சனையானது.

image

அடுத்தடுத்து 7 ரன்கள் இடைவெளியில் மூன்று விக்கெட்டுகளை டெல்லி இழந்திருந்தது. அந்த சமயத்தில் டெல்லி 10.3 ஓவர்களில் 74 ரன்களை எடுத்திருந்தது. இந்த சமயத்தில் ரன்ரேட் அழுத்தம் என்பதை விட விக்கெட் அழுத்தம் அதிகமாக இருந்தது. அதனால், அப்போது கூட்டணி சேர்ந்த ரிஷப் பண்ட்டும் சர்ஃப்ராஷ் கானும் கொஞ்சம் பார்த்து ஆடியிருந்தனர். ரிஷப் பண்ட் அந்த சமயத்தில் ரிஷ்க் எடுக்க விரும்பவில்லை. ஆனாலுமே பண்ட் மாதிரியான அதிரடி சூரர் மெய்டன் ஆடுவது ஏமாற்றம்தான். துரிதமான சிங்கிள்களை எடுக்கக்கூட ரிஷப் பண்ட் முயற்சிக்கவில்லை. இங்கே விட்டதை டெத் ஓவர்களில் பிடித்துவிடுவார்கள் என நினைத்தால் அங்கேயும் பிரச்சனையானது. ஹோல்டரும் ஆவேஷ் கானும் கடைசி 3 ஓவர்களை வீசியிருந்தனர். அந்த 3 ஓவர்களிலும் ரிஷப் பண்ட்டும் சர்ஃப்ராஷ் கானும் 19 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். ஒரே ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்திருந்தனர். இதனால் டெல்லி அணியால் 149 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. லக்னோவிற்கு டார்கெட் 150. டெல்லி அணி தங்கள் வரலாற்றில் இவ்வளவு குறைவான ஸ்கோரை டிஃபண்ட் செய்ததே இல்லை. அந்த ரெக்கார்டு இங்கேயும் தொடர்ந்தது. லக்னோ வென்றது.

டெல்லி அணி மும்பைக்கு எதிராக ஆடியிருந்த முதல் போட்டியில் லலித் யாதவ் மற்றும் அக்சர் படேல் இருவரும் டெத் ஓவர்களில் சிறப்பாக ஆடி கையைவிட்டு சென்ற போட்டியை இழுத்து பிடித்து அதிரடியாக வென்றிருந்தார்கள். அந்த இருவரும் + ஷர்துல் தாகூரும் அடுத்து பேட்டிங் ஆட காத்திருக்கையில் மெய்டனோடு நிறுத்தி நிதானமாக ஆடிய 108 ஸ்ட்ரைக் ரேட்டில் 39 ரன்களை அடித்த ரிஷப் பண்ட் மற்றும் சர்ஃப்ராஷ் கான் இருவரின் ஆட்டமுமே டெல்லியின் தோல்விக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

- உ.ஸ்ரீராம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post