”சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதுதான் நல்லது” : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

”நீக்கம் தொடர்பாக சசிகலா மேல்முறையீடு செய்வேன் என்பது வீண் முயற்சி” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கப்பட்டது சரிதான் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தார் சசிகலா. இந்த நிலையில், இந்த தீர்ப்பை வரவேற்று அதிமுக கட்சி அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

அதைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகிகள் வைத்தியலிங்கம், செங்கோட்டையன், வேலுமணி, சி.வி.சண்முகம், வளர்மதி, பொன்னையன் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக., அதிமுக அலுவலகத்தில் உரிமையியல் நீதிமன்றம் என்று வழங்கிய தீர்ப்பு குறித்து விவாதித்தனர். அதைத் தொடர்ந்து சட்டமன்றத்தின் நிகழ்வுகளும் கட்சியின் உட்கட்சி தேர்தல் குறித்தும் பேசப்பட்டது.
image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார்,

“சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கழக அமைப்புத் தேர்தல் நடைபெறக் கூடிய சூழலில், தொண்டர்கள் கட்டுப்பாடோடு இருக்கக்கூடிய இயக்கமாக அதிமுக இருந்து வருகிறது.

அதிமுகவை கைப்பற்றும் முயற்சி சசிகலாவிற்கு தொடர்ந்து தோல்வியை கொடுத்து வரும் நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது நல்லது. தேர்தலிலும், நீதிமன்றமும் நாங்கள் தான் அதிமுக என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலா மேல்முறையீடு செய்வேன் என்பது வீண் முயற்சி.

நிகழ்காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி சசிகலாவிற்கு அதிமுகவில் இடம் கிடையாது என்பதே முடிவு. சசிகலாவின் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீர் போலத்தான்” என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post