திருச்சுழி: மின்னல் தாக்கியதில் விளை நிலத்திலேயே உயிரிழந்த பெண் விவசாயி

திருச்சுழி அருகே இருவேறு இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் பெண் விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார். ஒருவர் பலத்த காயமடைந்தார். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி மி.புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரது மனைவி முத்துக்கருப்பாயி (வயது44). இவர் இன்று தனது வயலில் பருத்தி எடுப்பதற்காக சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், மேகம் இருள்சூழ்ந்த நிலையில் வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தனது தம்பிக்கு குடை எடுத்துக்கொண்டு மீண்டும் வயலுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பெய்த கனமழையின் காரணமாக திடீரென மின்னல் தாக்கியதில் முத்துக்கருப்பாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

image

திருச்சுழி தாசில்தார் சிவக்குமார் உத்தரவின்பேரில் உடலை கைப்பற்றி வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

image

அதேபோல் திருச்சுழி அருகே கேத்தநாயக்கம்பட்டியைச் சேர்ந்த வையம்மாள் என்பவர் வீட்டில் துணி எடுத்துக் கொண்டிருந்தபோது அவர்மீது மின்னல் தாக்கியது. இதில் படுகாயமடைந்த வையம்மாளை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post