சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் பிரேமலதா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில் ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு எதிரான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி, அவரது வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி தரப்பில் நிராகரிப்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுக்களில் விசாரணை நடத்திய நீதிபதி பாரதிதாசன் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். அந்த வழக்கில் இன்று காலை நீதிபதி உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.