சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடைமேடை எண் ஒன்றில் எடுத்து வரப்பட்ட மின்சார ரயில் சரியாக நேற்று மாலை 4.25 மணி அளவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
நல்வாய்ப்பாக பணிமனையில் இருந்து எடுத்துவரப்பட்ட ரயில் என்பதால் பயணிகள் யாரும் பயணிக்கவில்லை, ஓட்டுநர் ஷங்கர் என்பவர் மின்சார ரயிலை இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. விடுமுறை தினம் என்பதால் நடைமேடையில் பொதுமக்கள் கூட்டம் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறது. மேலும் 11 பணியாளர்கள் அந்த நடைமேடையில் தூய்மைப் பணி மேற்கொண்டு வந்துள்ளனர். உடனடியாக நடைமேடையில் இருந்து விலகும்படி ஓட்டுநர் ஷங்கர் சத்தமிட்டதைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களும் விலகிக் கொண்டுள்ளனர். இந்த விபத்தில் யாருக்கும் காயமுமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என சென்னை கோட்ட ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ரயில் விபத்துக்கு உள்ளான இடத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறை எஸ்பி இளங்கோ, விபத்துக்குள்ளான ரயில் முழுவதும் காவல்துறையினர் மூலம் பயணிகளின் உடைமைகள் எதுவும் உள்ளதா என்பதை பரிசோதித்தோம் என்றும் விபத்திற்கான காரணம் பிரேக் பிடிக்காததே என்றும் கூறினார். ரயிலை இயக்கி வந்த ஓட்டுநர் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
பொதுமக்கள் யாரும் விபத்திற்குள்ளான நடைமேடையில் வராத வண்ணம் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள், தொழில்நுட்ப குழுவினர் விபத்திற்குள்ளான ரயிலை 9 மணி நேரம் போராடி மீட்டு நடைமேடையில் நிறுத்தினர்.
கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான முதல் பெட்டி மற்றும் இரண்டாம் பெட்டியை தவிர்த்து இதர பெட்டிகளை அகற்றி பணிமனைக்கு அனுப்பி வைத்தனர். 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து விபத்துக் காலங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு இன்ஞின் மூலம் மீட்டனர்.
தடம்புரண்ட ரயில் மீட்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கோட்ட மேலாளர் கணேஷ், எதிர்பாராத விதமாக நேற்று இந்த விபத்து நடைபெற்றதாகவும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். தடம்புரண்ட ரயில் முற்றிலுமாக மீட்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும் இந்த விபத்தின் சேத மதிப்பு இதன் பிறகுதான் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அது குறித்தான தகவல் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்: விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற விமானப்படை வீரர்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News