பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சீர்காழியைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் கரூரில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முனியப்பன் அவரது மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் கார்முகில் ஆகிய 5 பேரும் சொந்த ஊரான சீர்காழி நோக்கி காரில் சென்றுள்ளனர்.
அப்போது பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே வரும்போது கார், முன்னால் சென்ற ஈச்சர் வாகனத்தின் மீது மோதி நின்றுள்ளது. அடுத்த வினாடி பின்னால் வந்த லாரி கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் கார் முன்னால் நின்ற ஈச்சர் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டது.
இதில், முனியப்பன் அவரது மனைவி, தாய், மகள் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 வயது மகன் கார்முகில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவன் கார்முகிலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த மங்களமேடு போலீசார் ஈச்சர் வாகனத்தின் அடியில் சிக்கிய காரை அகற்றி காரினுள் உயிரிழந்து கிடந்த நான்கு பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News