திருப்பூரில் நகை அடகுக்கடையில் 3.3 கிலோ தங்க நகைகள், ரூ.25 லட்சம் பணம், 28 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் , வடமாநில கொள்ளையர்கள் 4 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக நகைக்கடை மற்றும் நகை அடகுக்கடை இருக்கிறது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று காலை வந்த கடையை திறந்து பார்த்தபோது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கடை உரிமையாளர் ஜெயகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடையில் இருந்த 375 சவரன் தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி மற்றும் 25 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது, இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் முகமூடி அணிந்தபடி கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. நகை மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்த பின்பு கொள்ளையர்கள் ரயில் மூலம் தப்பிச் சென்றது ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சியில் போலீசார் கண்டறிந்தனர்.
இதனிடையே தனிப்படையினர் அனுப்பிய கொள்ளையர்களின் வீடியோ பதிவை கொண்டு ரயில்வே போலீசார் ரயிலில் உள்ள கொள்ளையர்களை தேடினர். பின்னர் அவர்களை கண்டுபிடித்த ரயில்வே போலீசார் நாக்பூர் அருகே பலர்சா என்ற இடத்தில் வைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, மஹ்தாப் அலாம் (37), பத்ருல் (20), முகமது சுப்ஹான் (30), திலாகாஸ் (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து கொள்ளையர்களிடம் சோதனை செய்த திருப்பூர் தனிப்படை போலீசார், 3 கிலோ தங்கம் 28 கிலோ வெள்ளி 14 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்களை கைது செய்து நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் அழைத்து வர உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News