நகர்ப்புற உள்ளாட்சிகளில் நகராட்சித் தலைவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் களமிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக போட்டி வேட்பாளராக ஷபீர் அகமது மனுத்தாக்கல் செய்தார். ஆம்பூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் எஜாஸ் அகமது அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், ஷபீர் அகமது மனுத்தாக்கல் செய்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் கார்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து போட்டி வேட்பாளராக நளினி சுரேஷ்பாபு மனுத்தாக்கல் செய்தார். மயிலாடுதுறை நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக செல்வராஜ் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து போட்டி வேட்பாளராக லிங்கராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சித் தலைவர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் வெண்ணிலாவை எதிர்த்து பரிமளா போட்டி வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து திமுக சார்பில் நகராட்சித் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அதேபோல, குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சித் தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து திமுக தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, குளச்சல் உள்ளிட்ட சில இடங்களிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் களமிறங்கினர். கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News