
ம.தி.மு.க. தலைமை மற்றும் வைகோவுக்கு எதிராக சில மாவட்டச் செயலாளர்கள் பேசி இருக்கும் நிலையில், கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
பத்தாண்டுகளுக்கு பிறகு மதிமுகவிலிருந்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தமிழகத்தில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அந்த தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு, அந்த நிர்வாகிகளை சந்திக்கும் வகையில் மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் தற்பொழுது சென்னையில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக நேற்றைய தினம் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிராக சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளன. அப்படியான சூழலில் தற்போது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதால், அதிருப்தியாளர்களை வைகோ சமாதானப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நடந்த எதிர்ப்புக் கூட்டத்தை தொடர்ந்து, புதிய தலைமுறைக்கு துரை வைகோ அளித்த ஒரு பேட்டியில், “நான் அரசியலுக்கு வந்ததை வாரிசு அரசியல் என்று சொல்ல முடியாது. கட்டாயத்தின் அடிப்படையில் தலைவர் வைகோவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சிக்கு வந்தேன். தற்போது என்னை எதிர்க்கும் சிவகங்கை மாவட்ட செயலாளரே, நான் கட்சிக்கு வர வேண்டும் என பலமுறை வலியுறுத்தி இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் தற்போது தலைமைக்கு எதிராக பேசுகின்றனர். சில காலம் அவர் செயல்படாமல் இருந்து இருக்கிறார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட வேலை செய்யவில்லை. கட்சிக்கு எதிராக பேசும் நிர்வாகிகள் மீது கட்சி சட்ட திட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுப்பார்கள். நாளை நடக்கும் பொதுக்குழு கட்சி வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் இருக்கும்" என தெரிவித்தார்.
இன்று மதிமுகவின் 28ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில், இதுபோன்ற சர்ச்சைகளுக்கு வைகோ முற்றுப்புள்ளி வைப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்தி: மேகதாது அணை விவகாரம்: தமிழகத்துக்கு எதிராக கர்நாடக பேரவையில் இன்று தீர்மானம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News