
திமுக சட்டப் போரைத் தொடங்கினால் அண்ணாமலையால் எதிர் கொள்ள முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி, அண்ணாமலை தொடர்ந்து பொய் பேசுவதையே தொழிலாகக் கொண்டு தன்னுடைய அரசியலை செய்து கொண்டிருக்கிறார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்ததிலிருந்து அடுக்கடுக்காக பொய்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக செயல்படுகிறார் என்பதை நாடு அறியும். அவர் பொறுப்பேற்றதிலிருந்து ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். அதனுடைய தொடர்ச்சியாகத்தான் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க கூடிய வகையில் துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ,முதல்வர் தன்னுடைய பணத்தை முதலீடு செய்யவே துபாய் சென்றுள்ளார் என குறிபிட்டுள்ளார் இது கண்டிக்கத்தக்கது. இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் என்ற முறையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 24மணி நேரத்தில் விளக்கம் அளிக்காவிடில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டு 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும்.

20 ஆயிரம் புத்தகங்களை படித்ததாக கூறும் அண்ணாமலை அந்த புத்தகங்களின் அட்டையை மட்டுமே பார்த்திருப்பார். அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் ஆனார் என்ற கேள்வியே தற்போது எழுந்திருக்கிறது. மானமுள்ளவராக இருந்தால் அனுப்பிய நோட்டீஸ்க்கு அண்ணாமலை பதிலளிக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி அறுபத்தி நான்கு முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கிறார், அப்படி என்றால் அண்ணாமலையில் கணக்குப்படி எவ்வளவு பணத்தை மோடி எடுத்துச் சென்றார். பாஜக-வினர் யார் யாரிடம் எப்படி பணங்களை மிரட்டி வாங்கினர் என்கிற பட்டியல் எங்களிடம் உள்ளது. தேவை ஏற்பட்டால் பட்டியலை வெளியிடுவோம். திமுக சட்டப் போரைத் தொடங்கினால் அண்ணாமலையால் எதிர்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News