``நிலுவையிலுள்ள நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்”- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

“உள்ளாட்சிகளுக்கான நிதி, நிவாரண நிதிகள், மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் தமிழகத்தின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கணக்குகளில் தமிழகத்துக்கான நிதிகள் நிலுவையில் உள்ளன. அந்த தமிழக நிதிகளை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்” என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லியில் நேற்று தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். முன்னதாக மத்திய அரசின் நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன், வருவாய் துறைச் செயலர் தருண் பஜாஜ் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அஜய் சேத் ஆகியோரை அவர் சந்தித்தார். இந்த நிகழ்வின் போது நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் என்.முருகானந்தம், உள்ளிட்ட அலுவலர்கள் அவருடன் இருந்தனர்.

image

அமைச்சர் நிர்மலா சீதாரமனுடனான சந்திப்பின்போது தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பின்போது, “மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள நிதிகள் விடுவிக்கப்பட்டால்தான் அந்த தொகைகளை தமிழக அரசு அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் சேர்க்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிதித்துறை செயலாளர் சோமநாதன் உள்ளிட்ட நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்த தமிழக நிதி அமைச்சர், தமிழகத்துக்கான திட்டங்களுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடுகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள விதிகளை மத்திய அரசு விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post