மகனின் திருமணத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தி கொண்டாடி மகிழ்ந்த தந்தை

விளாத்திகுளம் அருகே மகனின் திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தால் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக தந்தை நெகிழ்ச்சி அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவர் தனது இளம் வயதில் மாபெரும் மாட்டுவண்டி பந்தய வீரராக திகழ்ந்துள்ளார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது சொந்த கிராமமான விருசம்பட்டியிலிருந்து, சென்னைக்கு புலம்பெயர்ந்து அங்கு தன் குடும்பத்தினருடன் தற்போது வாழ்ந்து வருகிறார்.

image

இதனால் இவர் தொடர்ந்து மாட்டுவண்டி பந்தயங்களில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இதையடுத்து ஒரு முறையாவது தான் மாட்டு வண்டி பந்தயம் நடத்த வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை. இந்நிலையில் தனது மகன் முத்து பாண்டியின் திருமணத்தை தனது சொந்த கிராமத்தில் சிறப்பாக நடத்தினார்.

மாட்டுவண்டி பந்தயங்களில் தீராப்பற்றும், பேரார்வமும் கொண்ட ஆறுமுகசாமி, தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் மகனின் திருமணத்தை முன்னிட்டு 'மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்திற்கு' ஏற்பாடு செய்திருந்தார். பெரிய மாடு மற்றும் பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

image

இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் இளவரசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து பெரிய மாடுகள் சுற்றில் 19 மாட்டு வண்டிகளும், சிறிய மாடுகளுக்கான சுற்றில் 21 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டிவந்த சாரதிகளுக்கும் ஆறுமுகசாமி குடும்பத்தினர் சார்பில், பரிசுகள் வழங்கப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post