“அன்பான சென்னை மக்களே”- சென்னை மாநகராட்சி விடுத்த வேண்டுகோள்

நகர்ப்புற தேர்தலில், மாநிலத்திலேயே சென்னை மாவட்டத்தில்தான் இதுவரை குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியுள்ளதையடுத்து, பொதுமக்கள் வாக்களிக்குமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 648 நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிப்பு கண்காணிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், காலை 7 மணிக்கே நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களித்தார். இதேபோல், முதல் ஆளாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாக்களித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். எனினும் சென்னையில் காலை 9 மணி நிலவரப்படி, 3.96 சதவிகித வாக்குகளே பதிவானது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தான், மாநிலங்களிலேயே குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பான சென்னை மக்களே வீட்டில் இருந்து வெளியே வந்து வாக்களியுங்கள். உங்களது வாக்குச்சாவடிகளை இந்தத் தளத்தில் கண்டுபிடித்து, வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று, சரியான அடையாள அட்டையை காண்பித்து வாக்குகளை பதியுங்கள்’ என்று தெரிவித்துள்ளது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post