
கர்ப்பிணி பெண்ணை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ், மாநகராட்சி வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கர்ப்பிணி பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.
சென்னையை அடுத்த மாங்காட்டில் இருந்து சிகிச்சைக்காக கர்ப்பிணி பெண்ணான சாஹிரா பேகம் மற்றும் அவரது உறவினர்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை திருவீதி அம்மன் கோயில் அருகே மாநகராட்சி வாகனத்தை நிறுத்தி விட்டு சாலையை சுத்தம் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது கீழ்பாக்கத்தை நோக்கி வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மாநகராட்சி வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் மருத்துவ உதவியாளர் மங்களேஷ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக சிகிச்சைக்காக அனைவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News