அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: சிறந்த காளைக்கு மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் வழக்கமாக காணும்பொங்கல் அன்றுதான் ஜல்லிக்கட்டு நடக்கும். ஆனால், காணும் பொங்கல் நாளான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது.

அரசு வழிகாட்டுதல், கொரோனா கட்டுப்பாடுகளுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் 300 வீரர்கள், 700 காளைகள் பங்கேற்கின்றனர். சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. சிறந்த மாடுபிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்படும். களம் காணும் அனைத்து காளைகளுக்கும், காளையை தழுவும் வீரர்கள் அனைவருக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

image

மேலும் வெள்ளிக்காசு, டி.வி., பீரோ, கட்டில், சைக்கிள் என பரிசு மழை காத்திருக்கிறது. 30 பேர் வீதம் சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்படுவர். வீரர்களுக்கு ஒவ்வொரு சுற்றுக்கும் வெவ்வேறு வண்ண சீருடைகள் வழங்கப்படுகிறது. பிற ஊர்களை விட அலங்காநல்லூரில் சிறப்பம்சம் கொண்டது வாடிவாசல். இடதுபுறம் வளைந்து செல்லும் அமைப்பில் அலங்காநல்லூர் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்ற பின் ஜல்லிக்கட்டு துவங்கியது. ஆட்சியர், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கின்றனர். முதலில் கோயில் காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. கொரோனா பரவல் தடுப்புக்காக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. பார்வையாளர்கள் 2 தவணை தடுப்பூசி, கொரோனோ நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மதுரை எஸ்.பி. தலைமையில் 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 50 தீயணைப்பு வீரர்களுடன் 5 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் செல்லும் முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஒரு அடி உயரத்துக்கு தேங்காய் நார் போடப்பட்டு களம் தயார் செய்யப்பட்டுள்ளது. 50 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 10 அடி உயரத்தில் இரண்டடுக்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: யானையால் கொல்லப்பட்ட பாகன் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு கோரிக்கை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post