சென்னையில் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா மாதிரிகளை சேகரிக்கவும், விதிமுறைகளை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாள்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக குழுக்கள் அமைத்து, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுவது உள்ளிட்டவை தீவிரமாகக் கண்காணிக்கப்படுமென அறிவித்துள்ளது. நோய்த் தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறியவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சென்னையில் தினமும் 30 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன.
அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் அவ்வப்போது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. அனைத்து வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அவற்றின் விடுதிகள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், உணவு மற்றும் தங்கும் விடுதிகளிலும் மாதிரிகள் சேகரிக்கப்படும். இந்த இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்படும். இவ்விடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM