தமிழ்நாடு அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட ஊர்திகளோடு சேர்த்து புதிய இரண்டு ஊர்திகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் தந்தை பெரியார், முத்துராமலிங்க தேவர், வாஞ்சிநாதன், அழகுமுத்துக்கோன் உள்ளிட்டோரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. சிலை மற்றும் ஊர்திகள் அனைத்தையும் வடிவமைப்பதற்கான இறுதிகட்ட பணிகள் காமராஜர் சாலையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
73வது குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், பாரதியார், வேலு நாச்சியார் உள்ளிட்டோர் சிலைகள் அடங்கிய ஊர்தி டெல்லி அணிவகுப்பில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு ஊர்தி பங்கேற்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்னும் இரண்டு தினங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கனவே திட்டமிட்ட ஊர்திகளோடு சேர்த்து மொத்தமாக தற்போது மூன்று புதிய ஊர்திகள் இணைக்கப்பட்டுள்ளன. விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு என்னும் தலைப்பில் அமைய உள்ள இந்த ஊர்திகளில் 20க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தலைவர்கள் உருவங்கள் சிலைகளாக இடம்பெற உள்ளன. அதற்காக சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஊர்தி வடிவமைப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வாகனத்திற்கு 50 பேர் என்கின்ற வீதம் நான்கு வாகனங்களுக்கு 200க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக மங்கள இசை வாகனத்தோடு சேர்த்து மொத்தம் மூன்று ஊர்திகளில் சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகள் இடம்பெறவுள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு ஊர்தியிலும் என்னென்ன இடம் பெற போகிறதென்பது குறித்த சிறு தொகுப்பு, இங்கே:
முதல் ஊர்தி: மங்கள இசை, வள்ளுவர் கோட்டம், பரத நாட்டியம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கம்
இரண்டாவது ஊர்தி: சிப்பாய் புரட்சியை போற்றும் வகையில் வேலூர் கோட்டை, காளையார் கோவில் மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், குயிலி, வீர பாண்டிய கட்டபொம்மன், பூலி தேவன், அழகு முத்து கோன், ஒண்டி வீரன் சிலைகள்
மூன்றாவது ஊர்தி: பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ.உ சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, விஜய ராகவாச்சாரியார் சிலைகள் மற்றும் சுதேசி கப்பல் மாதிரி.
நான்காவது ஊர்தி: தந்தை பெரியார் , பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காமராஜர், ராஜாஜி, வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, ரெட்டை மலை சீனிவாசன், திருப்பூர் குமரன், வ.வே.சு ஐயர், காயிதே மில்லத், ஜெ.சி குமரப்பா, கக்கன் சிலைகள்
இந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை தொடர்ந்து, குடியரசு தின விழா நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் முதல் கட்டமாக கோவை, ஈரோடு, மதுரை போன்ற நகரங்களுக்கு 4 வாகனங்களும் பொதுமக்கள் பார்வைக்காக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.