
ஐஐடி மாணவி பாத்திமா மரணம் குறித்த சிபிஐ விசாரணையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை லத்தீப், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது வழக்கறிஞர் முகமது ஷா, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜாவாருல்லா ஆகியோர் அவருடன் இருந்தனர்.
முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய லத்தீப், “எனது மகள் தற்கொலை செய்து கொண்டு 2 வருடங்கள் 1 மாதம் ஆகிவிட்டது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து என் மகளுக்கு நீதிகிடைக்க முறையிட்டேன். தற்போது முதல்வராக உள்ள அவரை மீண்டும் சந்தித்து விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய லத்தீப்பின் வழக்கறிஞர் முகமது ஷா பேசுகையில், “மாணவியின் மரணம் தொடர்பாக கடந்த 2019 டிசம்பர் மாதத்தில், சிபிஐ விசாரணை துவங்கிய நிலையில் இரண்டு வருடங்கள் ஆகியும் விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. தாமததிற்கான காரணம் குறித்தும் தெரியவில்லை. பாத்திமாவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
தொடர்புடைய செய்தி: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: 2 ஆண்டுகளுக்குப்பின் தந்தையிடம் சிபிஐ விசாரணை
தொடர்ந்து பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “இந்தியாவையே உலுக்கிய மர்ம மரணமாக மாணவி பாத்திமாவின் மரணம் இருந்தது. கோட்டூர்புரம் காவல் நிலையம் விசாரித்து வந்த இந்த வழக்கு, மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்ட பிறகும் ஆமை வேகத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் அவர்கள் லத்தீப்பை விசாரித்துள்ளனர். இப்படியாக விசாரணை மர்மமான முறையில் நடைபெற்று வருகிறது. ஆகவே விசாரணை நேர்மையான முறையில் செல்ல வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வர் இது குறித்து தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்” என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News