
கோவையில் காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் கோவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை சரவணம்பட்டி பகுதி யமுனா நகரில் இன்று கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் உடலானது கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 13-ம் தேதியன்று அந்த சிறுமி மாயமானதாக அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலானது பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், SFI, DYFI, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் மருத்துவமனை பிரேத பரிசோதனை கட்டடம் முன்பு திரண்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் தீர்வு கிட்டும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என தெரிவித்து திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவித்து கலைந்து சென்று காத்திருக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News