பூந்தமல்லியில் மழைக்கு முன் துவங்கப்பட்ட சாலை பணிகள் அப்படியே கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட புதுத் தெரு, மாங்காடு சாலை, ,ருக்மணி நகர் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் சாலை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணிகள் நிறுத்தப்பட்டு விடுமுறைகள் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பாக துவங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக இப்பணிகள் தொய்வடைந்தது.
இதையடுத்து மழை காரணமாக இணைப்பு சாலைகள் சேதமடைந்து சாலை முழுவதும் தற்போது பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. இவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக சாலையில் இருக்கும் பள்ளங்கள் தெரியாமல் விழுந்து எழுந்து செல்வது அவ்வப்போது நேரிடுகிறது.
தற்போது மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மழையால் அவதியுற்று வந்த மக்கள் தற்போது மழையால் சேதமடைந்த சாலைகளால் அவதியுற்று வருகின்றனர்.