திருச்செந்தூரில் பக்தர் ஒருவர் கடலில் புனித நீராடியபோது தவறவிட்ட தாலிச்செயினை மீட்டெடுத்து அவரிடம் ஒப்படைத்த கடல் சிப்பி அரிக்கும் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் மதுசூதனன், அவரது மனைவி அங்கயற்கண்ணி மற்றும் குழந்தைகளுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர். இந்நிலையில் அங்கயற்கண்ணி நேற்று கடலில் குளித்து கொண்டிருந்தபோது, அப்போது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்செயின் அறுந்து கடலில் விழுந்துள்ளது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மதுசூதனன் திருச்செந்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து, கடலில் சிப்பி அரிக்கும் பக்தர்கள், கடல் பாதுகாப்பு குழுவினர், சிவராசன் (எ) ஜான் தலைமையில் தாலிச்செயினை தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று காலை கடலில் சிப்பி அரிக்கும் சரவணன் என்பவர் கையில் தாலிச்செயின் அகப்பட்டது. அந்த தாலிச்செயினானது திருச்செந்தூர் புறக்காவல் நிலைய காவல் அதிகாரி காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனை மதுசூதனன் - அங்கயற்கண்ணி தம்பதியினரிடம் காவல் அதிகாரி காந்தி ஒப்படைத்தார். கடலில் தவறிவிழுந்த தாலிச்சங்கிலியால் மனவேதனை அடைந்த மதுசூதனன் தம்பதியினர் முருகனுக்கு 1 பவுன் தாலியை காணிக்கையாக செலுத்தினர். மேலும் தொலைந்த தாலிச்சங்கிலியை தேடி கண்டுபிடித்துக் கொடுத்த கடல் சிப்பி அரிக்கும் குழுவினரை திருச்செந்தூர் பகுதி பொதுமக்களும் பக்தர்களும் மனமார பாராட்டி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM