
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் துணி சலவை செய்யும்(அயர்ன்) தள்ளுவண்டியில் 5 வயது ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரத்தில், சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேல்தெரு என்ற இடத்தில், சிவகுரு என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சாலையோரம் நான்கு சக்கர தள்ளுவண்டியில் சலவை தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், நேற்று இரவு கடையை எடுத்து வைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்ற அவர், இன்று காலை வந்து பார்த்தபோது, தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது என நினைத்து, அக்கம் பக்கத்தினரிடம் கூறவே அனைவரும் அந்த சிறுவனை தட்டி எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால், சிறுவன் அசைவின்றி கிடந்ததால் அதிர்ச்சியடைந்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்தபோது, ஆண் குழந்தை இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழந்தையின் புகைப்படத்தை காட்டி விசாரணை மேற்கொண்டதில், அனைவரும் தங்கள் வீட்டு குழந்தை இல்லை என்று தெரிவித்தனர். குழந்தையில் உடலில் எந்த காயமும் இல்லை. இதனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கேரளா: பாலின பேதமின்றி மாணவர்களுக்கு சீருடை - போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமிய அமைப்பு
மேலும், அது யாருடைய குழந்தை, விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த குழந்தையா அல்லது யாராவது வெளியே கொலை செய்துவிட்டு இங்கு கொண்டுவந்து தள்ளுவண்டியில் போட்டுவிட்டுச் சென்றனரா என்பது குறித்து, காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News