சென்னை போரூரில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
சென்னை மாங்காடு அடுத்த கொழுமணிவாக்கத்தை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் சங்கர் (60), இவரது மகன் மகேஷ் (33), மகேஷpன் நண்பர் சின்னராஜ் (28), இவர்கள் மூவரும் சபரிமலைக்கு மாலை போட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சபரிமலைக்கு சென்று சாமிதரிசனம் செய்து விட்டு இன்று அதிகாலை 3 பேரும் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில், கார் மோதிய வேகத்தில் சங்கர் மற்றும் சின்னராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மகேஷ் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகேஷ் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சபரிமலைக்குச் சென்று விட்டு வரும்போது ஏற்பட்ட விபத்தில் தந்தை மகன் மற்றும் நண்பர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News