
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டு 915 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நடப்பு 2021ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சிலிண்டர் விலை நிலவரத்தைப் பார்ப்போம்.
ஆண்டு தொடக்கம் முதல் இதுவரையிலான காலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறுமுகத்திலேயே காணப்படுகிறது. 10 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 205 ரூபாய் அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் ஒரு சிலிண்டரின் விலை 710 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த பிப்ரவரி மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மூன்று முறையாக 100 ரூபாய் உயர்த்தப்பட்டு 810 ரூபாய் ஆனது. மார்ச் மாதத்தில் 835 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர், ஏப்ரல் மாதத்தில் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 825 ரூபாய்க்கு விற்பனையானது.

அடுத்துவந்த மே, ஜூன் மாதங்களில் விலையில் மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி ஒரு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 875 ரூபாய்க்கும், செப்டம்பர் ஒன்றாம் தேதி 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டு 915 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News